×

கார்குடல் ஊராட்சியில் பரபரப்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் முறைகேடு

விருத்தாசலம், நவ. 26: விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக அப்பகுதியிலுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தெருக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குழாய்கள் அனைத்தும் பழுதடைந்து, குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள இந்திராநகர் பகுதியில் போதுமான அளவிற்கு குடிநீர் செல்லாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் குடிநீர் இன்றி தவித்த அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்ததன்பேரில் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பைப்லைன் விஸ்தரிப்பு திட்டம் மூலம் 4.5 லட்சம் ரூபாய் செலவில், 1500 மீட்டர் தூரத்திற்கு பழைய குழாய்களை தோண்டி எடுத்துவிட்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தரமில்லாத வகையில், விரைவில் உடையக்கூடிய, சிறிய அளவில் உள்ள, குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட குடிநீர் குழாய்களை பூமிக்கடியில் பொருத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதில் முறைகேடு நடந்துள்ளது என கூறி பணியை தடுத்து நிறுத்தி பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து அப்பணியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அப்போது தரமான குழாய்களை அமைக்க வேண்டும். இல்லையெனில் விருத்தாசலம் கம்மாபுரம்- நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடபோவதாக அறிவித்து சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் கம்மாபுரம் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.  இதையடுத்து சாலை மறியல் போராட்டம் செய்யும் முயற்சியை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் தொடர்ந்து பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை